சேலத்தின் வரலாறு:
சேலம் மாவட்டம் 1772ல் உருவாக்கப்பட்டது. சேலம் “மலைகள் சூழ்ந்த இடம்” என்று கூறப்படுகிறது. மேலும் சேலை நெசவில் பெயர் பெற்று, சேலையூர் என மருவியதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. சேலம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ஹொய்சாலர்கள் உள்ளிட்ட பல வம்சங்களால் ஆளப்பட்டது.தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம் சேலம் ஆகும். காரணம் நாமக்கல், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டவையாகும்.இது திருமணிமுத்தாறு ஏரியின் கரையில் அமைந்துள்ளது. மழவர் நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது.சேலம் மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், சோழ மன்னர்கள் காலத்தில் இது ராசாச்சரிய சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது.
பெயர்க்காரணம்:
சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள “சாலிய சேரமண்டலம்” என்ற தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேர்வராயன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே பிரிந்து சேலம் ஆனது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.
சேலத்தின் முதன்மை மலைத்தொடர் சேர்வராயன் மலை. சேர+ அரையன் என்பதன் திரிபு சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம்.
பழங்கால வரலாறு:
- சேலம் மாவட்டத்தில் கற்காலத்திற்கு முந்தைய மனித நாகரீகம் இருந்துள்ளது. புதிய மற்றும் பழைய கற்கால கருவிகள் மற்றும் விலங்கு சாண சாம்பல் குவியல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- சேலத்தில், தொல்லியல் சான்றுகளின் படி, 5000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
- சேலம் பகுதி சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் ஹொய்சாளர் ஆட்சியின் கீழ் இருந்தது.
- சேலத்தில் ரோமானிய பேரரசுடன் வணிகம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.
- சேலம் மாவட்டம் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது.
- இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடாரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்பு கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்வராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய தொகுதியில் கிடைத்திருக்கிறது.
- வர்த்தகம், தொழில்கள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளுக்கு பெயர்போன இம்மையம், பசுமையான மலைகளால் சூழப்பட்ட இயற்கையாகவே ஆசீர்வதிக்கப்பட்ட மாவட்டமாகும்.
சேலத்தின் சிறப்பு அம்சங்கள்:
சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகள்:
- S – Steel – எஃகு
- A – Aluminium -அலுமினியம்
- L – Limestone – சுண்ணாம்புக்கல்
- E – Electricity – மின்சாரம்
- M – Mangoes – மாம்பழம்
- சேலம், வெள்ளி கொலுசுகள் தயாரிப்பு பெயர் பெற்ற இடமாகும்.
- சேலம் ஜவுளி, மாட்டு தீவனம், ஜவ்வரிசி உற்பத்தி போன்ற தொழில்களும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.
- கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவமாகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை “மாங்கனி நகரம்” என்றும் அழைப்பார்கள்.இங்கு விளையும் மல்கோவா மாம்பழம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- தென்னிந்திய திரை துறையில் முதன் முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த சேலம் மாடர்ன் ஸ்டேட்டஸ் நிறுவனம் ஒரு தனிச்சிறப்பு மிகுந்தது.
- கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர்.
- சேலம் நகரத்தில் வாணிக வளத்தை பெருக்கும்இடம்‘லீபஜார்’ என்னும் கடைவீதியில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள் ஆகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகின்ற வாரச்சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு, இம்மாவட்டத்தில் இருந்தும் வேறு மாவட்டங்களில் இருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
- சேலத்தை சுற்றி பார்க்கத் தக்க இடங்கள்: 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவில், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தர் ஆசிரமம், திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட் ,சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறும்பபட்டி உயிரியல் பூங்கா- இது சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க பூங்கா ஆகும்.
- இம்மாட்டத்தில் பெரும் பகுதி செம்மண், களிமண் மற்றும் கரிசல் மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும்,வெள்ளாறும், வசிட்ட நதியும், திருமணிமுத்தாறும் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது.
- ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழமும் இதை தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பல வகைகள் ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
- 1937-இல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
- சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது.
- சேலம் பல்வேறு கனிம வளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன அரசின் SAIL நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரே ஒரு ஆலை ஆகும்.
- இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா மற்றும் தமிழக அரசின் TANMAG – TAMILNADU MAGNESITE LIMITED நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைந்துள்ளன.
- சேலம் வானூர்தி நிலையம் – ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இது 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தொழில்கள்:
நெசவுத் தொழில்: சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன.
சேலம் நகரத்தில் அம்மாபேட்டை பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டி பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.
சேலம் (உடையாபட்டி), ஆத்தூர், குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்ற வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள, சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் ரசாயன பொருள் தொழிற்சாலை, அலுமினிய தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்ற வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்டத்தில்தான் உற்பத்தியாகின்றது.
சேலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்:
ஏற்காடு ( மலைவாழிடம் – கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோவில், சேலம் உருக்காலை, மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு,சேலத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.இதன் பரப்பளவு 383 சதுர கி.மீ ஆகும்.மேலும் இது நிலமட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காட்டில் பகோடா காட்சி முனை, கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோயில் போன்ற பல இடங்கள் உள்ளன.

மேட்டூர் அணை:
காவிரி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை, சேலத்தில் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இவனையை கட்டியவர் ஜார்ஜ் எனும் ஆங்கிலேயர் ஆவர்.இவனையின் மூலம் தஞ்சை,திருச்சி,சேலம்,திருவாரூர்,நாகை போன்ற மாவட்டங்களின் நிலம் பாசனவாசதி பெறுகிறது .

குரும்பபட்டி உயிரியல் பூங்கா:
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா 1981ல் 11 ஹெக்டர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. தற்பொழுது 31.73 ஹெக்டர் பரப்பளவாக விரிவுபடுத்தப்பட்டு விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு குரங்குகள் ,மான்கள் ,மயில் ,முதலை மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை கூண்டுகளிலும் திறந்தவெளியிலும் விடப்பட்டுள்ளன .

சங்ககிரி கோட்டை:
சங்ககிரி கோட்டை, சேலம் மாவட்டத்தின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

சேலத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்கள்:
சேலம் நகரம் கோவில்களால் நிறைந்துள்ளது. அவற்றில் சில தேசம் முழுவதும் பிரபலமானவை. இந்தக் கோயில்கள் திராவிட கட்டிடக்கலை வகையின் செழுமையை பிரதிபலிக்கும் மனதை கவரும் கலை படைப்புகள் மற்றும் அம்சங்களால் நிரம்பியுள்ளன. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம் இங்கு உள்ள முக்கிய கோவில்கள் சில,
சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சுகவனேஸ்வரர் திருக்கோயில், அழகிரி பெருமாள் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன் காளியம்மன் கோவில், அம்மாபேட்டை மாரியம்மன் கோவில், சேலம் பழையூர் திரௌபதி அம்மன் கோவில், எல்லை பிடாரி அம்மன் கோயில், காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சௌந்தரராஜ பெருமாள் கோயில், குகை நமசிவாய கோவில், பட்டர் தோட்டத்து மாரியம்மன் கோவில், ஏத்தாப்பூர் முருகன் கோவில், அப்பா பைத்தியசாமி கோவில், அரியநூர் விநாயகர் கோவில்,சேலம் அருள்மிகு பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
சித்தர் கோவில் – இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்துள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட்கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்.

ஊத்துமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில் – சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.

குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், நாமமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ஏற்காடு சேர்வராயன் சுவாமி கோயில், நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி கோயில், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், சேலம் காசி விஸ்வநாதர் கோயில்,வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில், ஊத்துமலை பாலசுப்பிரமணியர் கோயில், சாஸ்தா நகர் ஐயப்பன் திருக்கோயில், அத்தனூர் அம்மன் கோவில் இவை அனைத்தும் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க புகழ்பெற்ற கோவில்களாகும்.
முத்துமலை முருகன் கோவில்:
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் உள்ள 146 அடி உயரம் உள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமானது. இது முக்கிய சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது.

இவை அனைத்தும் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்கள் ஆகும்.
