வரலாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சியாளர்கள், மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இது இந்தியா முழுவதும் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகவும், பல்லவர்களின் தலைநகரமாகவும் அறியப்படுகிறது. பல்லவர் காலத்தில், காஞ்சிபுரம் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நகரம், பல கோயில்கள் மற்றும் அகலமான சாலைகளுடன் இருந்தது.
பல்லவர் காலத்தில் ( கிபி 3 முதல் 9 ஆம் நூற்றாண்டு) காஞ்சிபுரம், வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே காவேரி நதி வரை பரவி இருந்த பகுதியின் தலைநகரமாக இருந்தது. காஞ்சிபுரம் பல்லவ மன்னர்களின் தலைநகராக 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது.
பிற்காலத்தில் காஞ்சிபுரம் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. காஞ்சிபுரத்தில் பல கோவில்கள் உள்ளன. அவை அதன் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் திராவிட பாரம்பரியத்திற்கு சான்று பகிர்கின்றன. 1968 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமாக காஞ்சிபுரம் இருந்தது. 1977இல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என பிரிக்கப்பட்டபோது, காஞ்சிபுரம் தனியாக ஒரு மாவட்டமாக உருவானது. காஞ்சிபுரத்தின் வரலாறு சங்க இலக்கியங்கள், பல்லவ மன்னர்களின் ஆட்சி மற்றும் பிற்காலாட்சிகள் என பல கட்டங்களை கொண்டுள்ளது.
பெயர் காரணம்: கா என்றால் பிரம்மா, அஞ்சி என்றால் வழிபாடு, காஞ்சி என்பது வரதராஜ பெருமாள் பிரம்மா வழிபட்ட இடத்தை குறிக்கிறது. பிரம்மா இங்கு அத்திவரதர் சிலை செய்து வழிபட்டுள்ளார். சமஸ்கிருதத்தில் காஞ்சி என்பது கச்சை என்று பொருள்படும் மேலும் நகரம் பூமிக்கு கச்சை போன்றது என்று விளக்கம் தரப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் தனது வரலாற்று சிறப்பு, மத முக்கியத்துவம், மற்றும் பட்டு தொழில் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. இது “கோயில் நகரம்” மற்றும் “பட்டு நகரம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பட்டு சேலைகளுக்கு பெயர் பெற்றது.
கோயில் நகரம்: காஞ்சிபுரத்தில் பல முக்கிய இந்து கோயில்கள் உள்ளன. அவற்றில் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பட்டுத்தொழில்: காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளன. மேலும் அவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
வரலாற்று சிறப்பு: காஞ்சிபுரம் பல்லவ மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. மேலும் பல வரலாற்றுச் சின்னங்கள் இங்கு உள்ளன.
மத முக்கியத்துவம்: காஞ்சிபுரம் சைவர்கள் மற்றும் வைணவர்களுக்கும் ஒரு புனித யாத்திரை தலமாகும்.
சங்கர மடம்: இந்து துறவியும் வர்ணனையாளருமான ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் ஒரு இந்து மடாலயத்தின் தலைமையகமாகும்.
பல்லவ கட்டிடக்கலை: காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் திராவிட கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
சுற்றுலா தலங்கள்:
காஞ்சிபுரம் அருங்காட்சியகம்: காஞ்சிபுரம் மாவட்ட அருங்காட்சியகம் தொல்லியல் மற்றும் கலை பொருட்களை கொண்டுள்ளது.
அறிஞர் அண்ணா இல்லம்: அறிஞர் அண்ணா இல்லம், முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் சி. என். அண்ணாதுரை அவர்களின் இல்லம்,இப்போது ஒரு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கர மடம்: மிகவும் புகழ்வாய்ந்த காஞ்சி காமகோடி பீடம் ஆகிய சங்கர மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு மூலமான்ய சர்வாஜன பீடம் என அழைக்கப்படுகிறது. இத்திருச்சபை நூறு ஆண்டுகள் பழமையானது ஆகும். இம்மடத்தின் 69 மற்றும் 70 ஆவது மடாதிபதிகள் முறையே ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர சுவாமிகள் ஆவர்.
மசூதிகள்: காஞ்சி மாநகரில் இரண்டு முக்கிய மசூதிகள் அமைந்துள்ளன. இம்மசூதிகள் 300 ஆண்டுகளுக்கு முன்னர்
நவாப்களால் கட்டப்பட்டுள்ளது.இம்மசூதிகள் ஜமா மஸ்ஜித் என அழைக்கப்படுகிறது. மசூதியின் உள்ளே 108 சிவலிங்கம் அமைக்கப்பட்ட மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது. புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு மசூதி அமைந்துள்ளது. வைகுண்ட பெருமாள் கோயிலுக்கும் மசூதிக்கும் ஒரே குளம் பொதுவாக அமையப்பெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோர்வ திருவிழாவில் இஸ்லாமியர்களும் இடம்பெறுவது தனிச்சிறப்பாகும்.
சிறப்பு மிக்க கோவில்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு கோயில்கள்:
காமாட்சி அம்மன் கோவில்:
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்து கோவில். இக்கோயில் காமாட்சி அம்பாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.“கா” என்றால் விருப்பம் “மாட்சி” என்றால் ஆள்பவர் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் ஆக காமாட்சி அம்மன் இங்கு அருள் பாலிக்கிறார்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்:
தேவார பாடல் பெற்ற ஸ்தலம், 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது.
கைலாசநாதர் கோயில்:
ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மவர்மனாரால் கட்டப்பட்ட கோயில், தென்னிந்தியாவின் உயரமான ராஜகோபுரம், 1008 சிவலிங்கங்களின் வரிசையுடன் அலங்கரிக்கப்பட்ட சுற்றுச்சுவர்கள்.

வரதராஜ பெருமாள் கோயில்:
வைணவர்களுக்கு பிரசித்தி பெற்ற திருத்தலம்.
கச்சபேஸ்வரர் கோயில்:
கைலாசநாதர் கோயிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.

சங்கர மடம்:
கைலாசநாதர் கோயிலில் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
முப்புராரீசர் கோயில் ( முப்புராரி கோட்டம்):
காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஒன்று.
கூரத்தாழ்வார் கோயில்:
கூரம் கிராமத்தில் அமைந்துள்ளது. கூரத்தாழ்வாரின் திரு அவதார மகோத்சவம் ஆண்டுதோறும் தை மாதம் நடக்கிறது.
ஆதிகேசவர் பெருமாள் கோயில்:
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் அமைந்துள்ளது. கூரத் ஆழ்வார் சன்னதி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆயிரம் கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பல தொன்மையான, பாடல் பெற்ற கோவில்கள் இங்கு உள்ளன.
