வரலாறு:
ஈரோடு மாவட்டத்தின் வரலாறு என்பது முற்கால கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் நிலப்பகுதியை உள்ளடக்கியது. இது பாண்டிய மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. 1799 இல், திப்பு சுல்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்தப் பகுதி மைசூர் மகாராஜாவினுடைய ஆளுமைக்கு வந்தது. மேலும் அரசனுர் அருகே தலவுமழை என்ற சிறுமலையில் கி.மு. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ள இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஈரோடு ஒரு வணிக பகுதி: ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது.
வனவளம்: இந்த வனப்பகுதியில், சந்தனம், வாகை, தேக்கு, ரோஸ்வுட், மருது, வேங்கை, கருங்காலி, ஈட்டி, புளி, மூங்கில் உள்ளிட்ட எண்ணற்ற மர வகைகள் உள்ளன.
தமிழகத்தில் கிடைக்கும் சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி இம்மாவட்ட வனப்பகுதிகளிலேயே கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழக அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்றும் உள்ளது.மேலும் இக்காடுகளில் இருந்து குங்கிலியம், மட்டிப்பால், தேன், சிகைக்காய், கொம்பரக்கு, பட்டை வகைகள், கடுக்காய், புங்கம் விதை, ஆவார பட்டை, உள்ளிட்ட பலவகை மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கிடைக்கின்றன.
இவ்வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, சிறுத்தை புலி, யானை, கரடி, காட்டெருமை, நீர்நாய், புள்ளிமான், கடமான், குள்ளமான், செம்புள்ளி பூனை, போன்ற 35 வகை பாலூட்டிகளும், மீன்பிடி கழுகு, மஞ்சள் திருடி கழுகு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, முதலை போன்ற ஊர்வனமும் வாழ்கின்றன.
ஈரோடு மாவட்டம்: ஈரோடு மாவட்டம் இலக்கிய புகழும், வரலாற்றுப் பெருமையும், தொல்பொருள் சிறப்பும் மிக்கது. ஈரோடு மாவட்டத்தில், தொல்லியல் ஆய்வுகள் மூலம் நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணல் என்ற இடத்தில் பண்டைய மக்கள் வசிப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் இவ்வூர் “கொடுமணம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர் குழந்தை போன்ற அறிஞர்கள், இலக்கிய ஆர்வத்தின் மூலம் கல்வி தகுதி பெற்று, ஈரோடு மாவட்டத்தில் இலக்கியத்தை வளர்த்துள்ளனர். இலக்கியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் ஈரோடு மாவட்டத்தில் வாசகர்களால் அங்கீகாரம் பெறாத மூத்த தலைமுறை படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.
ஈரோடு பெயர் காரணம்: ஈரோடு என்ற பெயர் இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலின் பெயரில் இருந்து உருவானது என்றும், ஈர ஓடு என்ற சொல்லிலிருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘ஈரோடு’ என்னும் சொல்லானது பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்தது தான் ஈரோடை. இந்த ஈரோடை தான் காலப்போக்கில் மருவி ஈரோடு என்றானதாக நவீன வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.
பைரவ புராண விளக்க உரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை அழைக்கவில்லை, அவரது மனைவி தாட்சாயினி, தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்குச் சென்றாள்; யாகத்தில், தமது கணவரை, தந்தை இழிவுபடுத்தியதால் மனம் உடைந்து திரும்பினாள்.மேலும் அவள் சிவனிடம் திரும்பிய பின் சிவன் கோபமுற்று தாட்சாயினியை எதிர்த்தார் எனக் கூறுகிறது.
அதைக் கேட்ட பிரம்மா, தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு, ‘பிரம்மதோஷம்’பிடித்தது. பிரம்ம தோசத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்தபோது, இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள வெள்ளோடு ( வெள்ளை மண்டை), பேரோடு( பெரிய மண்டை), சித்தோடு( சிறிய மண்டை ) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறப்படுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது, ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின்( கோட்டை ஈஸ்வரன் கோவில்) கோபுரத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.
ஊர்கள்: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள்:
- ஈரோடு மாவட்டம் மஞ்சள் மற்றும் கைத்தறி துணி தயாரிப்பில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பவானி கூடுதுறை, கொடிவேரி அணை, சென்னிமலை, பவானிசாகர், பன்னாரி அம்மன் கோவில், பாரியூர், கொடுமுடி ஆகிய இடங்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும்.
- ஈரோடு மாவட்டம் மஞ்சள் சாகுபடிக்கும், ஜவுளி உற்பத்திக்கும் பெயர் பெற்றது. இதனால் ஈரோடு “மஞ்சள் மாநகரம்” என்று அழைக்கப்படுகிறது.கைத்தறி, விசைத்தறி, ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது “ஜவுளி நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு: ஈரோடு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 35 சதவீதம் விவசாய நிலங்கள் தான் உள்ளது. இங்கு நெல், சோளம், எள், புகையிலை, பருத்தி, தென்னை, வாழை, போன்றவை அதிகமாக பயிரிடப்படுகிறது. அந்தியூர் தாலுகாவில் வெற்றிலை சாகுபடியும் குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் சாகுபடி மற்றும் சந்தை: தமிழகத்தில் விளையும் மஞ்சளில் பாதிக்கு மேல் இந்த மாவட்டத்திலேயே விளைகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு மாநகரம் திகழ்கிறது. இதனால் இந்நகரம் மஞ்சள் நகரம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இந்த சந்தையில் தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பட்டுப்பூச்சி கூடு: கோபிசெட்டிபாளையத்தில் பட்டு நூல் எடுப்பதற்கு அவசியமான பட்டு பூச்சியின் கூட்டுக் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக பட்டுப் பூச்சிகளின் உணவான முசுக்கட்டை மரம் அதிகமாக பயிரிடப்படுகின்றன. கோபியில் தமிழக அரசின் பட்டு ஆராய்ச்சி நிறுவன மையமும் இருக்கிறது.
நெசவுத்தொழில்: கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் ஈரோடு மாவட்டம் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. பவானி, சென்னிமலை, அந்தியூர், பெருந்துறை, ஈரோடு பகுதிகளில் அதிக அளவில் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் புடவைகள், வேட்டி, துண்டு, லுங்கி, ஜமுக்காளங்கள், தரை விரிப்புகள், மற்றும் ரெடிமேட் ஆடைகள் அனுப்பப்படுகின்றன.
ஜவுளிகளுக்கான சந்தையில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள “ கனி மார்க்கெட்” உலகின் பெரிய ஜவுளி சந்தைகளில் ஒன்றாகும். பட்டு நூல் உற்பத்தி மற்றும் பட்டுத்துணி நெய்தலும் கோபிசெட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம் பகுதிகளில் நடைபெறுகிறது. பவானி நகரம் ஜம்முகாளங்களுக்கு புகழ் பெற்றது.
பிற தொழில்கள்: அரிசி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், எண்ணெய் ஆலை, காகித ஆலைகள், தோல் பதனிடுதல், வேளாண்மை கருவிகள், மற்றும் இயந்திரங்கள் தயாரித்தல், பருத்தி நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், மரம் அறுக்கும் தொழிற்சாலைகள், பித்தளை பாத்திரங்கள் தயாரித்தல், பால் பதனிடுதல், பால் பொருட்கள் தயாரித்தல் போன்றவை மாவட்டத்தின் பிற முக்கியமான தொழில்கள் ஆகும். இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அந்தியூர் குதிரை சந்தையும், கண்ணபுரத்தின் மாட்டு சந்தையும் புகழ்பெற்றவை.
சுற்றுலா தலங்கள்:
பவானிசாகர் அணைக்கட்டு, கூடுதுறை, குண்டேரி பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, சென்னிமலை, திண்டல் முருகன் கோயில்,கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சுற்றுலா தலங்கள்: அரச்சலூர் – கல்வெட்டுகள்; பெருந்துறை – விஜயமங்கலம்; கொடுமணல் தொல்லிற்களம் புதைபொருள் ஆய்வு இடம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
பவானி சாகர் அணை:
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை இது. 32 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில்32.8 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடியும். இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரில் மின்சாரம் எடுக்கப்பட்ட பின் 125 கிலோமீட்டர் நீளம் கொண்ட “கீழ்பவானி திட்ட கால்வாய்” மூலம் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் திறந்து விடப்படுகிறது. பசுமையான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத்தலமான இந்த அணை பகுதியில் அழகிய பூங்கா ஒன்று உள்ளது.

கொடிவேரி அணை:
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பல குன்றுகளுக்கு இடையே பச்சை பசேல் என்ற இயற்கை எழில் சூழ காட்சி தரும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் இந்த அணை உள்ளது. மனதுக்கு இதமான சுற்றுலா தலமாக இந்த அணை உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் மைசூர் மகாராஜாவால் பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்:
ஈரோட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் வெள்ளோடு சரணாலயம் உள்ளது. பெரிய ஏரியைச் சுற்றி அடர்ந்த புதர்களும், பெரிய மரங்களும் கொண்ட இப்பகுதிக்கு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல வகையான வெளிநாட்டு பறவைகளும் வலசை வருகின்றன. ஏரியைச் சுற்றி பல கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா பெரியார் நினைவு இல்லம்:
ஈரோடு மாநகரின் தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த அவருடைய இல்லம் தமிழக அரசால் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இல்லத்தில் பல புகைப்படங்கள், பெரியார் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

தீரன் சின்னமலை நினைவு மண்டபம்:
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து ஆரம்ப கால சுதந்திரப் போர்களில் போர் புரிந்தவர் ஆவார். திருநெல்வேலி பாளையக்காரர்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் இடையே 1799 முதல் 185 வரை நடந்த தொடர் போர்களில் தீரன் சின்னமலை முக்கிய தளபதியாக செயல்பட்டவர். இவர் நினைவாக அரசனூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மலைகளையும், வனங்களையும், பசுமையான விவசாய நிலங்களையும் விரும்பாதார் யார்? ஈரோடு மாவட்டம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

புகழ்பெற்ற வழிபாட்டு கோவில்கள்:
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களான பாரியூர் அம்மன் கோவில், பச்சைமலை மற்றும் பவளமலை, பன்னாரி கோவில், பவானி முக்கூடல், சென்னிமலை கோவில், சிவன் மலை கோவில், தொண்டீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி இரங்கப் பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்:
பவானியும், காவிரியும் கூடும் இடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக சிவன்( சங்கமேஸ்வரர்) விஷ்ணு( ஆதிகேசவப் பெருமாள்) சன்னதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. இக்கோயிலில் பிரிட்டிஷ் கலெக்டர் வில்லியம் ஹாரோ அவர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட கட்டில் ஒன்று உள்ளது. இக்கூடுதுறையில் அமிர்தா நதி பூமிக்கு அடியில் சேர்வதாக ஐதீகம் உள்ளது. அதனால் வட இந்தியாவின் திருவேணி சங்கமத்திற்கு இணையானதாக கருதப்படுகிறது. இக்கூடுதுறை சுற்றுலா தலமாகவும் உள்ளது.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்:
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பன்னாரி கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலுக்கு அண்டை மாநிலத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இங்கு நடக்கும் தீமிதி திருவிழா பிரசித்தி பெற்றது.

ஜைன மதக் கோயில்:
ஈரோட்டிற்கு 25 கிலோமீட்டர் தூரத்தில் விஜயமங்கலம் என்ற இடத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு “கொங்கு வேளீர்” மன்னரால் கட்டப்பட்ட ஜைனமத்தினருக்கான கோயில் உள்ளது.

பண்ணாரி கோவில்:
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி அம்மன் கோவில். சத்தியமங்கத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் ஆறு மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில் தான் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தளமாகும். கொத்தமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரண பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பன்னாரி அம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது.

